Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச)
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு பரபரப்பான சூழலில் இன்று (ஆகஸ்ட் 17) மீண்டும் சட்டசபை கூடியது. இன்றைய சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்களை பட்டியலிட்டு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது,
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட கும்பர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்தப் பிரச்னையை நான் சட்டசபையில் எழுப்பிய போது, அது கோஷ்டி பூசல் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கினார்.
ஆனால், 10 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொன்றதால், இது கொலை. கோவை செட்டிபாளையம் போலீசார், வழக்கு விசாரணைக்காக அமுதனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துள்ளனர்.
அப்படி அங்கு சென்ற அவரிடம் போதைப்பொருள் கும்பல் குறித்து தகவலை கேட்டுள்ளனர்.
அதன்பிறகு, அமுதன் குறித்த தகவலை போதைப்பொருள் கும்பலிடம் பகிர்ந்துள்ளனர்.
இதுதான் அமுதனுடைய மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது நான் மட்டும் சொல்லவில்லை, அமுதனின் பெற்றோரே சொல்லியிருக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார்,
கோவை மாணவன் கொலை சம்பவத்தில், உண்மை நிலவரத்திற்கு மாறாக, போதைப்பொருள் தொடர்பான சம்பவமாக வழக்கின் உண்மைத் தன்மையை திசைதிருப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கோவை கல்லூரி மாணவர் அமுதனை, முன்விரோதம் காரணமாக, அதே கல்லூரியில் பயின்று வரும் சக மாணவர்கள் கடந்த 10ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று தாக்கியுள்ளனர்.
காயமடைந்த அமுதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அன்றைய தினமே செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர், வன்கொடுமை தடுப்புச்சட்டம் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு 11ம் தேதி அமுதனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமுதன் உள்ளிட்டோர் சக மாணவர்களை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், 9ம் தேதி இரு குழுக்களுக்கு இடையேயான பழிவாங்கும் நோக்கிலான தாக்குதலே அமுதனின் மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகாரிலோ, போலீசாரின் விசாரணையிலோ அறியப்படவில்லை. மேலும், பழிவாங்கும் சம்பவங்களை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை பார்த்து போலீசாரிடம் அளித்த தகவல் மற்றும் விபரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்ததால், இந்தக் கொலை சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறும் எந்த சம்பவமும் இவ்வழக்கில் நடக்கவில்லை.
இவ்வழக்கு போதைப்பொருள் தொடர்பான வழக்கு அல்ல. இது மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம் தான். இவ்வழக்கை போதைப்பொருள் தொடர்பான சம்பவமாக வழக்கின் உண்மைத் தன்மையை திசைதிருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மேகமலை விவகாரத்தில் கடந்த ஆட்சிக் காலங்களில் அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே தற்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனையின் வேர் மிகவும் பழமையானது. குறிப்பாக 2009 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக் காலங்களில் இந்த விவகாரத்தை அரசு முறையாகவும், உறுதியாகவும் கையாண்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசின் உயர்மட்டக் குழு கடந்த 8 மாதங்களாக தமிழகத்தில் தங்கி ஆய்வு செய்ததை சுட்டிக்காட்டினார். மத்திய குழு தமிழகத்தில் 8 மாதங்கள் ஆய்வு செய்தபோதே, மேகமலை பகுதி பாரம்பரியமாக தமிழக விவசாயிகளும், பழங்குடி மக்களும் வாழ்ந்து வரும் பகுதி என்பதற்கான உரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் அப்போதைய அரசு சமர்ப்பித்திருந்தால் இந்த பிரச்சனையை அங்கேயே முடித்திருக்கலாம். ஆதாரங்களை தாக்கல் செய்யத் தவறியதால் தான் இன்று வன விவசாயிகள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேகமலை விவகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்கும் என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b