Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின் போது அறிவித்த முக்கிய வாக்குறுதிகள் இன்னும் கிடப்பில் உள்ளதாக குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன்,
ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் தான் ஆகின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.
ஒரு ஐந்தாண்டு கால ஆட்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை வெறும் நூறு நாட்களில் எடைபோடக்கூடாது என்று கூறிய அவர், தற்போது அரசு அனைத்து துறைகளிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டங்களை முறையாக வகுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
அவசர கோலத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு பெயரளவில் திட்டங்களை செயல்படுத்தும் அரசு இதுவல்ல என்றும், இது மக்களுக்கு நிரந்தர பலன் தரும் தூய்மையான, நேர்மையான ஆட்சி என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் காற்றில் விடப்படாது என்றும், அவை அனைத்தும் சட்டப்பூர்வமாகவும், நிதி ரீதியாகவும் சாத்தியமான வகையில் ஆராயப்பட்டு, படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக மக்கள் இந்த அரசின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படும் என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b