Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் புதிய ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணங்களை அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஆன்லைன் வழியாக பத்திரப்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் விற்பனை மனை (First Sale of Plot), முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First Sale of Flat) ஆகியவற்றுக்கான பத்திரப்பதிவுகளை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள முடியும். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் விற்பனை ஆவணங்கள், வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான அடமானம் மற்றும் ரத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் வகையில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள், வங்கிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN