Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேதாந்தம் முருகப்பா நாயக்கர் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், அந்தப் பகுதி தொடர்பாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இடம் தொடர்பான உரிமை விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மீறி அப்பகுதியில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
எனினும், தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து முதலமைச்சரின் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ