பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் – ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த நபர் பிடிபட்டார்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஒருவர் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருப்பதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கவனித்தனர். இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதுடன், அவர் வைத்தி
Gold


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஒருவர் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருப்பதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கவனித்தனர்.

இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதுடன், அவர் வைத்திருந்த உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது, அவரது உடைமைகளில் அதிக அளவிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மொத்தம் 1.369 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி என தெரியவந்துள்ளது.

தங்க நகைகளை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இல்லாததால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் சென்னை வேப்பேரியைச் சேர்ந்த அபிஷேக் (45) என்பது தெரியவந்தது. தங்க நகைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது, அவற்றின் உரிமையாளர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக மதிப்பிலான தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டதால், இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் அபிஷேக்கையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1.369 கிலோ தங்க நகைகளையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளுக்கான ஆவணங்கள், அவற்றின் உரிமை மற்றும் அவை எதற்காக கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ