காவல் துறை தாக்கியதாக குற்றச்சாட்டு - பரமசிவம் மரணம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவு
மதுரை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் வாகனம் நிறுத்துவது தொடர்பான தகராறில் காயமடைந்தது குறித்து புகார் அளிக்கச் சென்ற பரமசிவத்தை, ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி போலீசார் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று தாக்கியதாக அ
பரமசிவம்


மதுரை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர்

வாகனம் நிறுத்துவது தொடர்பான தகராறில் காயமடைந்தது குறித்து புகார் அளிக்கச் சென்ற பரமசிவத்தை, ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி போலீசார் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று தாக்கியதாக அவரது மனைவி அய்யம்மாள் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் நிலையத்தில் சிசிடிவி இல்லை என்றும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தாக்கியதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும், மதுரை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூத்த தடயவியல் மருத்துவர்கள் மூலம் பரமசிவத்தின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.

சிந்தாமணி காவல் நிலையத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா, ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி அகற்றப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் செல்வகுமாரை நீதிமன்ற ஆணையராக நியமித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவல் நிலையத்தில் சிசிடிவி அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளதா என்பது தொடர்பான விவரங்களையும் சேகரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam