Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் 87 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களின் வினாத்தாள்களில் கடுமையான குளறுபடிகள் இருந்ததாக தேர்வர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர்.
குறிப்பாக ஆங்கில பாடத்தாளில் 2024-ம் ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட 67 வினாக்கள் அதே விடைகளுடன் அப்படியே மீண்டும் கேட்கப்பட்டதாகவும், சமூகவியல் பாடத்தாளில் எழுத்துப்பிழைகள், இலக்கண பிழைகள் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பில் கடுமையான தவறுகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக தேர்வர்கள் அளித்த புகார்களை பரிசீலிக்க தேசிய தேர்வு முகமை ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது மறுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 84 பாடங்களுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய மூன்று பாடங்களுக்கு மட்டும் தனியாக மறுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான மறுத்தேர்வும், செப்டம்பர் 10-ம் தேதி சமூகவியல் பாடத்திற்கான மறுத்தேர்வும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான திருத்தப்பட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு மைய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in-ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b