ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கேட்டு தகராறு – தந்தையை மினி சரக்கு வாகனம் ஏற்றி கொன்ற மகன்
காஞ்சிபுரம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ஊராட்சிக்குட்பட்ட ராம்ஜி தெருவில் வசித்து வந்தவர் சத்யா (50). இவரது மனைவி நாகம்மாள். தம்பதிக்கு சந்துரு, முனுசாமி, சதீஷ் என மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளன
கொலை


காஞ்சிபுரம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த

மண்ணூர் ஊராட்சிக்குட்பட்ட ராம்ஜி தெருவில் வசித்து வந்தவர் சத்யா (50).

இவரது மனைவி நாகம்மாள். தம்பதிக்கு சந்துரு, முனுசாமி, சதீஷ் என மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரது இரண்டாவது மகன் முனுசாமி (25), அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வீடு கட்டுவதற்காக தனக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் அல்லது இடம் வாங்குவதற்கு பணம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த சில மாதங்களாக தந்தை சத்யாவிடம் முனுசாமி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மது மற்றும் கஞ்சா போதையில் மினி சரக்கு வாகனத்தில் ராம்ஜி நகருக்கு வந்த முனுசாமி, மீண்டும் தனது தந்தையிடம் இடம் அல்லது பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முனுசாமி, சதீஷை நோக்கி மினி சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.

இதனை பார்த்த சத்யா, தனது மகன் சதீஷை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா மீது மினி சரக்கு வாகனம் மோதியதுடன், வாகனத்தை நிறுத்தாமல் சுமார் 300 மீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் சத்யாவின் கை, கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மினி சரக்கு வாகனத்துடன் தப்பிச் சென்றதாக கூறப்படும் முனுசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நிலத் தகராறில் போதையில் மகனே தந்தையை மினி சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்த சம்பவம் மண்ணூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam