Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலுார், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெரம்பலுார் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அருணாசலம், 40. இவர், பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் தேநீர் கடை வைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்த தேநீர் கடையில் சிலிண்டரில் ஏற்பட்ட எதிர்பாராத கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என மொத்தம் 16 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டீ மாஸ்டர் தினேஷ், ஊழியர்களான சகாதேவன், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தேநீர் கடை ஊழியர் ஆறுமுகம் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b