தீக்குண்டத்தில் தவறி விழுந்த பக்தர்: காயமின்றி உயிர் தப்பிய அதிசயம் – தீமிதி விழாவில் பரபரப்பு
திருவள்ளூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயிலில் 29-ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 7
தீமிதி திருவிழா


திருவள்ளூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயிலில் 29-ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 7-ஆம் தேதி காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்துக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் திடீரென நிலைதடுமாறி தீக்குண்டத்திற்குள் விழுந்தார். இதனால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர்.

எனினும், அதிர்ஷ்டவசமாக அந்த பக்தருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் காயமின்றி எழுந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மன் அருளால் தான் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பக்தர் காயமின்றி உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து தீமிதி திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.

விழா நிறைவடைந்த பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வானவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam