Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
யு.ஜி.சி.நெட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து குளறுபடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டி, மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜூன் 2026-ல் நடைபெற்ற யு.ஜி.சி.நெட் தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களில் உண்மைத்தகவல், மொழி மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பாக பல்வேறு பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மூன்று பாடங்களுக்கும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எஸ்.எப்.ஐ., அந்த அமைப்பை முற்றிலும் கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேசிய தேர்வு முகமையின் தொடர்ச்சியான செயல்பாட்டு தோல்விகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில் புதிய தேர்வு முறையை உருவாக்க வேண்டும் என்றும் எஸ்.எப்.ஐ. வலியுறுத்தியுள்ளது.
யு.ஜி.சி.நெட் தேர்வில் ஏற்படும் இதுபோன்ற குளறுபடிகள் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிப்பதுடன், தேர்வு முறையின் மீதான மாணவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் என எஸ்.எப்.ஐ. தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சர்ச்சைகள் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தற்போது யு.ஜி.சி.நெட் தேர்வு வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள பிழைகள் தொடர்பான விவகாரமும் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ