Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்காக பிருந்தாவனத்தைச் சேர்ந்த கைம்பெண் தாய்மார்கள் தங்களது கைகளால் 1,100 சிறப்பு ராக்கிகளை தயாரித்துள்ளனர்.
இந்த ராக்கிகளை பிரதமர் மோடியின் இல்லத்துக்கு கொண்டு சென்று, அவரது கைகளில் நேரடியாக கட்டுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மதுராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோபிநாத் கோவிலில், சுலப் இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த ராக்கிகள் தயாரிக்கப்பட்டன.
சமூக கட்டுப்பாடுகளை கடந்து கோவிலில் ஒன்று திரண்ட கைம்பெண் தாய்மார்கள், கிருஷ்ண பஜனை பாடல்களுக்கு நடனமாடியபடி உற்சாகமாக ராக்கிகளை அலங்கரித்து, பின்னர் அவற்றை அழகாக பேக்கிங் செய்தனர்.
குடும்பத்தினராலும், சமூகத்தினராலும் கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிருந்தாவனத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட கைம்பெண் தாய்மார்களின் நல்வாழ்வுக்காக சுலப் இன்டர்நேஷனல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கும் அந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் 2012-ம் ஆண்டு உத்தரவுக்குப் பின்னர், இந்த தாய்மார்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் மோடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ராக்கி உள்ளிட்ட அன்பளிப்புகளை அனுப்புவதை பிருந்தாவனம் கைம்பெண் தாய்மார்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பிரதமர் மோடிக்காக 1,100 சிறப்பு ராக்கிகளை அவர்கள் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA