கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரம் - வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் விடுத்துள்ள தனது கண்டன அறிக்கையில், கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டம், காவிர
VCK


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் விடுத்துள்ள தனது கண்டன அறிக்கையில்,

கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் மற்றும் மகிமை தாஸ் ஆகியோர் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த தங்கள் மாடுகளை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் மீது கர்நாடக வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர், மகிமை தாஸ் ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளார்.

மூன்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு சாம்ராஜ் நகர் மாவட்ட ஹானூர் தாலுகாவில் போராட்டம் தொடர்கிறது.

மேலும், கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள தமிழர் கிராமங்களில் இன்னும் பதற்றம் தொடர்கிறது.

தங்களின் வளர்ப்பு மாடுகளை பிடிக்கச் சென்றவர்களைப் பிடித்து, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுப் படுகொலை செய்ததாக அங்கு வாழும் தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வழக்கமாக அப்பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்தோரின் உடல்களைக் கொள்ளேகால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தான் வழக்கம். ஆனால், தற்போது இம்மூவரின் உடல்களை மைசூரூ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது கர்நாடக அரசு. இப்படுகொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே, கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சட்டப்படிமேற்கொள்ளவிருக்கும் குற்றவியல் நடுவரின்

(மாஜிஸ ட்ரேட்) விசாரணை அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை மறைக்கவும், வனத்துறை அதிகாரிகளைப் பாதுகாக்கவுமே உதவும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பது கேள்விக்குறியே ஆகும்.

கர்நாடக வனத்துறையினர் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் துப்பாக்கிச்சூடு புதிதாக நடந்த ஒன்று அல்ல. ஏற்கனவே, 2023ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் உள்ள கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ஏழு பேர் கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜா என்ற காரவடையான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு முன்னர், கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள கர்நாடக எல்லைப் பகுதியான செட்டிபட்டியைச் சேர்ந்த பழனியை கர்நாடக வனத்துறை பிடித்து, சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றனர். பழனியின் படுகொலையைக் கண்டித்து அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக அவ்வப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தித் தமிழர்களைப் படுகொலை செய்வது தொடர்கதையாகவுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொலைவெறியாட்டம் நடத்திவரும் கர்நாடக அரசின், குறிப்பாக அதன் வனத்துறையினரின் தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட அம்மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்கிட முன்வர வேண்டுமென கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், அம்மூவரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விசிக சார்பாக வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN