Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே வேலக்குறிச்சியைச் சேர்ந்த செங்குட்டுவன் 1996 முதல் 2001 வரை தி.மு.க ஆட்சியில் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
பின்னர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் முதல் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் செங்குட்டுவன், அவரது இரண்டு மகன்கள், மகள், மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கைவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், செங்குட்டுவனின் மகன்கள், மகள் மற்றும் சகோதரனின் மகள் ஆகிய நான்கு பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
திருச்சி நீதிமன்றத்தின் இந்த தண்டனையை எதிர்த்து செங்குட்டுவனின் மகன் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் தொடங்காததால் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதி முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை எனக் கூறி, எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, அவர்களது மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / vidya.b