Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் சிறப்பு நோடல் அதிகாரிகளை நியமித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்த நோடல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மழைக்காலத்தில் மிக முக்கியமான மழைநீர் வடிகால் பணிகள், வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத இணைப்புகளைக் கண்டறிதல், தூர்வாரும் பணிகள் மற்றும் மாஸ் கிளீனிங் எனப்படும் தீவிர தூய்மைப் பணிகளை துரிதப்படுத்தவும், அதன் தரத்தை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் பணிகள், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆகியவற்றையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அனைத்து ஆய்வுப் பணிகளையும் தினமும் அலுவலக நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து, பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அவ்வப்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நோடல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b