அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை கைவிட்டதில் என்ன தவறு? – உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டமன்ற அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு உள்ளது என சென்னை உயர் நீதிமன
உயர்நீதிமன்றம்


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டமன்ற அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், மீதமுள்ள 21 பேரும் மன்னிப்பு கோரி கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததை தொடர்ந்து, சபாநாயகரும் நடவடிக்கையை கைவிட்டார்.

இதனை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகுமார் தொடர்ந்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொறடா உத்தரவை மீறியவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், இது கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும், பொதுச்செயலாளர் மன்னித்ததால் அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “மன்னித்ததால் அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னித்து தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதில் என்ன தவறு உள்ளது? தற்போதைய நிலையில் எந்த கட்சித்தாவல் நடவடிக்கையும் இல்லை” எனக் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P