வெடிகுண்டு மிரட்டல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் முடிவு
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள், மூத்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 2023 முதல் 2025 வரை 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பியதாகக் கூறப்ப
சரத்


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள், மூத்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 2023 முதல் 2025 வரை 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் பணியாற்றி வந்த சரத், கடந்த மாதம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 31 வழக்குகளில், 20 வெடிகுண்டு மிரட்டல்களை தான் விடுத்ததாக சரத் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கேரள மாநிலத்திலும் சரத் மீது 70 வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்து, சரத் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை பெற்று, சரத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P