சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை – வரி ஏய்ப்பு புகாரில் அதிகாரிகள் அதிரடி
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில
வருமான வரித்துறை


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் சூர்யா டெக் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனம் எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை மற்றும் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகள், வருமானம் மற்றும் வரி செலுத்திய விவரங்களில் முறைகேடுகள் அல்லது வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஒரே நேரத்தில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam