Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ள தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, மாநில எல்லைப் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தமிழ்நாடு–கர்நாடகா இடையே மீண்டும் முக்கிய விவாதமாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை டி.கே. சிவகுமார் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை சென்னையில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு சென்று டி.கே. சிவகுமாரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் பயணம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு உள்ளிட்ட சூழ்நிலைகள் காரணமாக கூறப்பட்டன.
அப்போது, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடகாவில் அரசியல் சூழலும் பரபரப்பானது.
இந்த நிலையில், ஒரே மாநாட்டில் இரு மாநில முதல்வர்களும் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளதால், காவிரி நீர், மேகதாது அணை உள்ளிட்ட தமிழ்நாடு–கர்நாடகா இடையேயான நீர்வளப் பிரச்சினைகள் தொடர்பாக டி.கே. சிவகுமார்–ஜோசப் விஜய் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam