Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களை நிர்வகித்தல், மேற்பார்வை செய்தல், கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள் மற்றும் 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.8.2026) பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
இதில், இந்து சமய அறநிலையத்துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பணிநியமனம் பெற்றுள்ள அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சமய நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ