Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2026–27-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் 100 ஆண்டுகால சமூகப் பங்களிப்பை விளக்கும் காணொளி திரையிடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜி. திலகவதி தலைமை தாங்கினார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான பி. அனுக்ரஹா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும், சவால்களிலிருந்து மீண்டெழும் மன உறுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து, தனித்துவமான திட்டங்களை வகுத்துக்கொண்டு கடினமாக உழைக்க வேண்டும்.
எதிர்கால வளர்ச்சிக்கு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி மிகச் சிறந்த அடித்தளத்தை வழங்கும். மாணவர்கள் இணையப் பாதுகாப்பு , உடல் மற்றும் மன நலம் பேணல் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் போதிய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் பி. ஸ்ரீதேவி, டீன் ஆர். நடராஜன், டீன் கே. வைதேகி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம். ஹரிதாஸ்,
ஆண்கள் விடுதிக் காப்பாளர் கே. இளங்கோவன், பெண்கள் விடுதிக் காப்பாளர் பி. ராணி, இணை டீன் பேராசிரியர் சி. ஜி. சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
இறுதியாக, நிர்வாகப் பிரிவு டீன் எஸ். சரவணன் நன்றியுரை ஆற்றினார்.
Hindusthan Samachar / ANANDHAN