Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 18 ஆகஸ்ட் (ஹி.ச)
பெரம்பலூர் மாவட்டம் கீழ்க்கணவாய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் குரங்குகள் அடிக்கடி நுழைந்து மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் காரணமாகக் காட்டி கல்லூரி நிர்வாகம் வனத்துறையின் உரிய அனுமதி பெறாமல், வெளியிலிருந்து குரங்கு பிடிப்பவர்களை வரவழைத்து குரங்குகளை பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்வாறு பிடிக்கப்பட்ட குரங்குகளை மிகவும் கொடூரமான முறையில் கையாண்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் குரங்குகள் கட்டி வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, குரங்குகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ளன. அவற்றை பிடிக்கவோ, துன்புறுத்தவோ, இடமாற்றம் செய்யவோ வனத்துறையின் முறையான அனுமதி பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேரடியாக கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, குரங்கு பிடிப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் மாதிரிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஜீவா(வயது 20), திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த சின்னத்துரை (70) ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Hindusthan Samachar / vidya.b