Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கைத்தறி துணிகளை விற்பனை செய்யவும் உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விற்பனை மற்றும் வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் விற்பனையகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளதாகவும், சில விற்பனையகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாகவும், சிலவற்றில் விற்பனையும், மற்றவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ், ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்ததாகவும், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவே தற்போதைய நிலை என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
2025-26ஆம் ஆண்டில் 200 ஆக இருந்த கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக குறைந்துள்ளதாகவும், மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்பட்டால், இதே நிலை நீடித்தால் 2035-ல் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டிய நிறுவனம் மூடுவிழா காணும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், முக்கிய நகரங்களில் ‘வெற்றித் தறி’ ஷோரூம்கள் அமைக்கப்படும் என்றும், நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்ய பிரத்யேக இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததை அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
“புதிய விற்பனையகங்களைத் திறப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது” என அவர் விமர்சித்துள்ளார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை மூடும் முடிவை கைவிட்டு, தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் புதிய விற்பனையகங்களைத் திறந்து, நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P