அயலக உயர்கல்வி திட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அன்பில் மகேஷ்
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு நடப்பாண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் பயின்று வரும் மாணவருக்கான
அன்பில் மகேஷ்


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு நடப்பாண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் பயின்று வரும் மாணவருக்கான கல்விக் கட்டணம் இதுவரை செலுத்தப்படாதது ஏன் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

2025–2026ஆம் கல்வியாண்டில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து பயின்று வரும் மாணவருக்கு நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணம் செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது என்றும், இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சில கல்வி நிறுவனங்கள் புதிய விதிமுறையை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உதவித்தொகை வழங்கும் அமைப்பு இடையில் நிதியை நிறுத்திவிட்டால், மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதால், இத்தகைய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வி நிறுவனங்கள் விளக்கம் அளித்திருப்பதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழக அரசின் உதவித்தொகையை நம்பி வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதேபோன்று இன்னும் எத்தனை நாடுகளில் பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அரசின் உதவித்தொகையை மட்டுமே நம்பி கடல்கடந்து கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்களுக்கு இதுபோன்ற அலட்சியப் போக்கு கடுமையான மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என வேதனை தெரிவித்துள்ள அன்பில் மகேஷ், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் விடுவிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam