பொறியியல் சேர்க்கை - மூன்றாம் சுற்று விருப்பப்பதிவு நாளை நிறைவு
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு (TNEA) நடத்தி வரும் இந்த கலந்தாய
Engineering Admissions


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு (TNEA) நடத்தி வரும் இந்த கலந்தாய்வில், இரண்டாம் சுற்று முடிவில் மொத்தம் 88,930 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை கிட்டத்தட்ட 89 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவது உறுதியாகியுள்ளது.

இதனிடையே, மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மூன்றாம் சுற்றில் மொத்தம் 1,02,719 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான விருப்பப்பதிவு (Choice Filling) நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நாளை, ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது என்று பொறியியல் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

எனவே மாணவர்கள் காலதாமதமின்றி தங்கள் விருப்பங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இதுவரை கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களுக்காக துணைக் கலந்தாய்வு (Supplementary Counselling) நடத்தப்பட உள்ளது.

இந்த துணைக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடைய மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொறியியல் படிக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b