மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழப்பு? – பிணவறையில் நீதிபதி விசாரணை
மதுரை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பூசாரி பரமசிவம் (55) காவல்துறையினர் தாக்கியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி அவரது உடல்
உயர்நீதிமன்றம்


மதுரை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பூசாரி பரமசிவம் (55) காவல்துறையினர் தாக்கியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி அவரது உடல் பிணவறையில் நீதிபதி விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 18-ம் தேதி பரமசிவத்துக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக சிந்தாமணி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது பரமசிவத்தை போலீசார் தாக்கியதாகவும், அதனால் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, வீட்டில் கீழே விழுந்ததில் காயமடைந்ததாக பரமசிவம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 15-ம் தேதி உயிரிழந்தார்.

போலீசாரின் மிரட்டல் காரணமாகவே காயம் ஏற்பட்டதற்கான காரணத்தை மாற்றி தெரிவித்ததாகவும், பரமசிவத்தின் உயிரிழப்புக்கு காவல்துறையினர் தாக்கியதே காரணம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்த குடும்பத்தினர், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், சிந்தாமணி காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் ஆனந்த், அப்துல் முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி மேற்பார்வையில் உடற்கூறாய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்ட 5-வது நடுவர்மன்ற நீதிபதி லட்சுமிபிரியா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் பரமசிவத்தின் உடலை ஆய்வு செய்து வருவதுடன், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P