Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்து உயர்மட்ட விசாரணை கோரியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் உயிரிழந்தனர். வனத்துறையினர் நடத்திய வேட்டைத்தடுப்பு நடவடிக்கையின்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், தங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நான்காவது நபர் ஒருவர் தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறிய தமிழக முதல்வர் விஜய், சம்பவம் குறித்து நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்,நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.
அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் ஏற்கனவே மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு எந்தச் சூழலில் நடைபெற்றது, முதலில் யார் துப்பாக்கிச்சூடு நடத்தினர், வனத்துறையினர் தற்காப்புக்காகவே சுட்டார்களா என்பது உள்ளிட்ட அம்சங்கள் விசாரணையில் இடம்பெற உள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, உயிரிழந்தவர்கள் காணாமல் போன கால்நடைகளைத் தேடிச் செல்லவில்லை என்றும், துப்பாக்கி, தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்ட பொருட்களுடன் வனப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படும் தகவல்களுக்கும் கர்நாடக அரசின் விளக்கத்துக்கும் இடையே முரண்பாடு நீடிக்கிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P