Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். அவர்கள் மான் வேட்டைக்காக செல்லவில்லை என்றும், காணாமல் போன மாடுகளைத் தேடியே காட்டுக்குள் சென்றதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் சம்பவம் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்து பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam