தொகுதி மறுவரையறையை கண்டித்து அமித்ஷா வருகையின்போது காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் – மாணிக்கம் தாகூர் அறிவிப்பு
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ப. மாணிக்கம் தாக
மாணிக்கம் தாகூர்


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ப. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் உத்தரவிட்டது யார் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருவதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகக் கூறி, உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் நாளான ஆகஸ்ட் 19-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தனது தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உணர்த்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam