Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)
சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் மீது வீண் பழி சுமத்தி தனது வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்து அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகுதான் 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது.
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல என்றும், அதிமுக ஆட்சிதான் என்றும் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தி திட்டங்களை உருவாக்குவதும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேவையான முடிவுகளை மாற்றிக் கொள்வதும் காங்கிரஸ் இயக்கத்தின் பண்பாகும். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாஜக அரசு ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தேசிய தேர்வு முகமை என்ற ஒரே அமைப்பிடம் ஒப்படைத்து, வினாத்தாள் கசிவு, முறைகேடுகள், பயிற்சி மையங்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நீட் தேர்வை வணிகச் சந்தையாக மாற்றிவிட்டதாகவும் மாணிக்கம் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோன பின்னரும், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தனது பிடிவாதத்தை கைவிடவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தபடி, எந்த மாநிலத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த மாநிலம் விரும்புகிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்பதே காங்கிரஸ் கட்சியின் தெளிவான நிலைப்பாடு என்றும் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டை தனது கூட்டணிக் கட்சியான பாஜகவை ஏற்க வைக்க எடப்பாடி பழனிசாமியால் முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாஜகவின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக “தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்” என்று மத்திய பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் இப்போதாவது எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா என்றும் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ