Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகளுக்கு மாதாந்திர மானிய உதவித்தொகை நிறுத்தப்படும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கும் முறை நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக நேரடி பணப் பரிமாற்ற முறையில் (DBT) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக வழங்கப்பட்ட 10 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.300 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மானிய முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை சென்றடைவதை உறுதி செய்யவும் ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு மற்றும் இ-கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காத மற்றும் ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி மாதாந்திர மானிய உதவி வரவு வைக்கப்படாது.
இது தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களை (CSC) அணுகி, ரேஷன் அட்டையில் ஆதார் எண் இணைப்பு, உறுப்பினர் விவரம் புதுப்பித்தல், இ-கேஒய்சி சரிபார்ப்பு உள்ளிட்ட 9 வகையான சேவைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b