Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
விழுப்புரம் நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் காளிதாஸ் வீட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் காளிதாஸ் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியது தயா என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.
இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எடுத்து பிரபலமாவதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் குண்டு வீசும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி அதிக பார்வைகளையும், லைக்குகளையும் பெற வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில் அவர் இந்த குற்றச் செயலை அரங்கேற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பெட்ரோல் குண்டு தயாரிக்கப் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாகவும், பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b