Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாழப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி விடுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் ராதிகா, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனது ஆண் நண்பர் ரகுபதியுடன் இணைந்து மதுபானம் மற்றும் சில்லி சிக்கன் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
விடுதியில் இருந்த மற்ற மாணவிகள் தூங்கிய பின்னர், இரண்டு மாணவிகளை அருகிலுள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மதுபானம் அருந்த வைத்ததுடன், ரகுபதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஒரு மாணவியின் தாயார் கடந்த 15ஆம் தேதி வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையைத் தொடர்ந்து விடுதி தூய்மை பணியாளர் ராதிகா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
மாணவிகளுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து, ரகுபதியுடன் இணைந்து அவர்களை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது தொடர்பான தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் ரகுபதி (35) தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும், ரகுபதி மீது ஏற்கனவே வாழப்பாடி காவல் நிலையத்தில் குற்ற எண் 349/2026-ன் கீழ் பிஎன்எஸ் பிரிவுகளில் வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam