Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் கோட்டை மைதானத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி 200-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பால் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் மற்றும் ஆவின் பிரதமர் சங்கங்களின் பணியாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பால் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக, ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45-ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பால் உற்பத்திக்கான தீவனம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், பால் உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகச் செலவுகளுக்கான விளிம்பு தொகையை, ஆதார விலையின் அடிப்படையில் லிட்டருக்கு 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பால் கேன்களுடன் ஏராளமானோர் ஒரே இடத்தில் திரண்டதால் சேலம் கோட்டை மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam