Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி தொடர்பான மேல்முறையீடுகளில் நிலவி வந்த குளறுபடிகளை களையும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யும் புதிய நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுவரை கட்டடத் திட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டால், மனுதாரர்கள் காகித வடிவில் நேரடியாக அலுவலகங்களுக்குச் சென்று மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் காலதாமதம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் நிலவி வந்தது. இதனை மாற்றும் விதமாக தற்போது முழுவதும் ஆன்லைன் வழியிலான ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசாணையின்படி, திட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டதற்கான உத்தரவு கிடைத்த இரண்டு மாதங்களுக்குள் மனுதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டு மனுவை இணையதளம் வழியாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒற்றைச் சாளர இணையதள அமைப்பை நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இணைந்து செயல்படுத்த உள்ளன. மனு தாக்கல் செய்யப்பட்டவுடன், அதற்கான ஆவணங்கள் இணையதளம் மூலமாகவே சரிபார்க்கப்பட்டு, விசாரணைக்கான தேதி குறித்த அறிவிப்பு மனுதாரருக்கு ஆன்லைனில் வழங்கப்படும்.
மேலும், இந்த புதிய நடைமுறையின் மூலம் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் தற்போதைய நிலை, விசாரணை விவரங்கள் மற்றும் இறுதித் தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளிப்படையாக இணையதளத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b