Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகியோர் மீது செய்தியாளர்களை தாக்கியதாகக் கூறப்படும் புகாரில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 27ஆம் தேதி சோளிங்கர் பகுதியில் யூடியூபர் சிவா என்பவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சம்பவத்தை செல்போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த செல்போன்களை கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகியோர் பிடுங்கியதுடன், இரு செய்தியாளர்களையும் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சோளிங்கர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகிய இருவர் மீதும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 296(b), 115(2), 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN