Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் வழிவிடுமாறு கேட்ட இளைஞர் ஆகாஷுக்கும், விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், “Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையினர் விசிகவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஆகாஷை கையை ஓங்கி அடிப்பது போல் அச்சுறுத்தி தாக்கியதும், அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததும் துரதிர்ஷ்டவசமானது என்றும், இரு சம்பவங்களும் கண்டிக்கத்தக்கவை என்றும் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் முதலில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவலர்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்த முடியாது எனக் கூறிய அவர், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறை தட்டிக் கேட்ட இளைஞரை சில காவலர்கள் அதிகாரத்தின் ஆணவத்தில் அச்சுறுத்தி அமைதியாக்க முயன்றதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பல காவலர்கள் இணைந்து ஆகாஷை பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றிய காட்சி கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், ஆகாஷின் உயிர், உடல் நலம் மற்றும் உடைமைகளுக்கு முதலமைச்சர் விஜய் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P