Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலுங்கானாவில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், நிலம் இல்லாத ஏழை குடும்பங்களுக்கு ‘பூ லட்சுமி’ திட்டத்தின் கீழ் தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தெலுங்கானா பாதுகாப்பு சேனா தலைவர் கலுவகுண்ட்ல கவிதா அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கவிதா கூறியதாவது:-
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு நிலம் என்பது வெறும் வணிக பரிவர்த்தனையாக இருக்கலாம். ஆனால் ஏழை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு நிலமும், காடும் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாகும்.
தெலுங்கானாவில் எந்தவொரு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், முதலில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட் நிலங்களே கையகப்படுத்தப்படுகின்றன. இதுவரை அரசு சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அசைன்மென்ட் நிலங்களை பறித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, ஏழைகளின் அசைன்மென்ட் நிலங்களுக்கு அவர்களுக்கே முழுமையான உரிமையை வழங்க வேண்டும். இதில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு உண்மையான அக்கறை இருந்தால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் சகோதரர்களும், துணை முதல்-மந்திரி பட்டி விக்ரமார்காவின் குடும்பத்தினரும் மாநிலத்தில் சுரண்டலில் ஈடுபட்டு வருவதாக கவிதா குற்றம்சாட்டினார்.
சமூகநீதி இல்லை
ரேவந்த் ரெட்டி பேசுவது சமூகநீதி பற்றியதாக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக உள்ளன. அவர் ‘முகத்தில் நல்லவர் போல் தோன்றும் புலி’ போன்றவர். அவரது ஆட்சியில் சமூகநீதிக்கு பதிலாக காட்டுச் சட்டம் போன்ற நிலை காணப்படுகிறது.
அமைச்சரவை அமைப்பது முதல் அரசு ஆலோசகர்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணையர்கள் நியமனம் வரை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் உயர்சாதியினருக்கு ஒரு நீதியும், ஏழைகளுக்கு வேறு நீதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், நிலம் இல்லாத ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கும் வகையில் ‘பூ லட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு கவிதா கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA