Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஹைட்ரோகார்பன் சர்ச்சை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரொலித்தது.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எழுப்பி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
பரங்கிப்பேட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஹெச்.ஓ.இ.சி.எல் எனப்படும் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்புளோரேஷன் கம்பெனி நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தத் திட்டத்தால் கடல் வளம், மீன் வளம் மற்றும் பாரம்பரிய மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் மற்றும் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் அழியும் அபாயம் உள்ளதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட கிள்ளை பேரூராட்சியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் மல்லிகா தலைமையில், தமிமுன் அன்சாரி முன்னிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சட்டப்பேரவையில் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மீன் வளத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்பதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்றும், பரங்கிப்பேட்டை திட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை முறையாக தெரிவிக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
முன்னதாக இதேபோன்ற ஹைட்ரோகார்பன் முயற்சிகளுக்கு முந்தைய திமுக அரசு அனுமதி மறுத்தது போல, தற்போதும் தமிழ்நாட்டின் எந்த கடற்பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b