மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்- திருமாவளவன்
தமிழ்நாடு, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) மேகமலை – வருசநாடு வனப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்து மக்
திருமாவளவன்


தமிழ்நாடு, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேகமலை – வருசநாடு வனப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்து மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேகமலை – வருசநாடு வனப்பகுதி கடந்த 2012-ம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டதாகவும், 2021-ம் ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், நூறாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதிகளில் வசித்து வரும் சுமார் 6,000 குடும்பங்கள் தொடர்ந்து அங்கு வசிப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் வனத்துறையினரால் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டமனூர், மேகமலை, வருசநாடு, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 5,072.653 ஹெக்டேர் நிலப்பரப்பை 4,601 பேர் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் கடந்த மே 29-ம் தேதி தீர்ப்பு வழங்கியதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதி அப்புறப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், அவர்களுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பட்டா உள்ளிட்ட உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வன உரிமைகள் சட்டம் 2006-ஐ தமிழ்நாடு முழுவதும் விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்றும், வனங்களில் வசிக்கும் பழங்குடியினர் மட்டுமின்றி பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P