கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கில் திருப்பம் - கைது எண்ணிக்கை 15 ஆக உயர்வு
கோவை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது கே. அமுதன், கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். மலுமிச்சம்பட்டி அருகே அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ர
Twist in the murder case of Coimbatore student Amudhan


கோவை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது கே. அமுதன், கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

மலுமிச்சம்பட்டி அருகே அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் ஆகியோரை ஒரு கும்பல் வழிமறித்துக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. அங்கு மரக்கட்டைகள் மற்றும் இரும்பு ராடுகளால் அமுதன் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

படுகாயங்களுடன் அறைக்குத் திரும்பிய அமுதனுக்குத் தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

கல்லூரி விடுதியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து மாணவர் அமுதன் கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் கும்பலாக சேர்ந்து அவரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த 4-ஆம் ஆண்டு பொறியியல் மாணவரான ஆர். மோனிசன் (21) என்பவரை 15-வது நபராகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இவ்வழக்கில் மொத்த கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இவர் இந்த கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b