Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
வி.சி.க ஆர்ப்பாட்டத்தின் போது காவலரை கன்னத்தில் அறைந்த இளைஞர் மீது குறைந்தபட்ச பல பிரயோகமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக தஞ்சாவூர் காவல்துறை அளித்த விளக்கத்தில்,
17/08/2026 பகல் 12 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.
அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.
இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த SSI 928 ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நிலைமை மேலும் மோசமடையாமல் கட்டுக்குள் கொண்டு வர, குறைந்தபட்ச பல பிரயோகத்தை SSI ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதற்கு அந்த நபர் SSI ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய சூப்பர்வைசர் மூலம் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 17) மற்றும் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநில மாநாட்டை முன்னிட்டு நேற்று தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.சி.க நிர்வாகி லெனின் தலைமையில் நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, வி.சி.க-வினர் அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் என்ற இளைஞருக்கும், வி.சி.க-வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அங்கு பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீன், அந்த இளைஞரை கன்னத்தில் அறைய, கோபமடைந்த அந்த இளைஞர் பதிலுக்கு ரஹீனை கன்னத்தில் திருப்பி அறைந்தார்.
அந்த இளைஞரை 5க்கும் மேற்பட்ட போலீசார் சேர்ந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. இந்நிலையில், வி.சி.க-வினரின் சாலை மறியலின் போது காவல்துறை அதிகாரியை இளைஞர் அறைந்ததும், அதற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளதும் பேசு பொருளாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN