நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கிடைக்குமா? - நீதிமன்றம் இன்று விசாரணை
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடான EWS இடஒதுக்கீட்டை எதிர்த்தும் நீட் - EWS ஒழிப்போம்! சமூக நீதி காப்போம்! என்ற முழக்
two-wheeler rally against the NEET exam


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடான EWS இடஒதுக்கீட்டை எதிர்த்தும் நீட் - EWS ஒழிப்போம்! சமூக நீதி காப்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ள திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் திட்டமிடப்பட்டது.

இந்த பேரணியை கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் பேரணி தொடங்க இருந்த அன்று காலை பெரியார் திடல் முடக்கப்பட்டதாகவும் திராவிடர் கழகம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து காவல்துறையின் அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.இளந்திரையன் அமர்வு முன்பு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? அமைதியாக நடத்தப்படும் இருசக்கர வாகன பேரணியை முடக்குவது ஏன்? என காவல்துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இந்த பேரணியில் எத்தனை பேர் பங்கேற்க உள்ளனர், எந்தெந்த வழித்தடங்களில் பேரணி செல்லும், எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்பது குறித்த முழு விவரங்களையும், அனுமதி மறுப்புக்கான காரணத்தையும் விரிவாக தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து உயர் நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b