Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவையில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது.
வண்டல் மண் அள்ளுவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள், விவசாய நிலங்களில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றுவதில் விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகள் மற்றும் அதுதொடர்பான அரசின் கொள்கை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.
இந்தப் பிரச்சினை அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், விதி 55-ன் கீழ் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஒத்திவைக்காமல் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால், இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் மற்றும் அரசு தரப்பில், கவன ஈர்ப்பு தீர்மானம் மறுக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள் பதில் தயாரித்த பின்னர் முறைப்படி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளைப் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b