நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் - ஈரோட்டில் 11 அரியவகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல்
ஈரோடு 19 ஆகஸ்ட் (ஹி.ச.) நடிகர் விக்ரம் அரியவகை லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வனத்துறையினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் லார் கிப்பான் உள்ளிட்ட 11 அரியவகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்ய
விக்ரம்


ஈரோடு 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

நடிகர் விக்ரம் அரியவகை லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வனத்துறையினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் லார் கிப்பான் உள்ளிட்ட 11 அரியவகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விக்ரம், அரியவகை குரங்கான லார் கிப்பானுடன் இருக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வீடியோவை அவர் நீக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது,

அந்த லார் கிப்பான் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவரிடமிருந்து பெறப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து கேசவநாதனுக்குச் சொந்தமான பண்ணையில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு லார் கிப்பான், ஆப்பிரிக்கன் பூனைகள் உள்ளிட்ட பல்வேறு அரியவகை வெளிநாட்டு உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லார் கிப்பான் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்களை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த 13-ம் தேதி மாவட்ட வனத்துறை சார்பில் கேசவநாதனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கேசவநாதன் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் விக்ரமுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும், லார் கிப்பான் விற்பனை நடைபெறவில்லை என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியவகை வன உயிரினங்களை வைத்திருந்ததாக எஸ்.கே.கேசவநாதன் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் இரண்டு பிரிவுகளில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேசவநாதன் தலைமறைவானதாகவும், அவரை வனத்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கேசவநாதனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்து 2 லார் கிப்பான் குரங்குகள், 7 ஆப்பிரிக்கன் பூனைகள், 2 டஃப்டெட் கபுச்சி குரங்குகள் என மொத்தம் 11 வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்த விலங்குகள் அதே இடத்தில் வனத்துறையினரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர் விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு லார் கிப்பான் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P