மாத்தூரில் கோவில் விழா மோதல் - வாலிபரை துரத்திச் சென்று வெட்டிய கும்பல் 3 பேர் கைது
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை கொடுங்கையூரில் உள்ள கடும்பாடி அம்மன் கோவில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதில் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் நடனமாடியதாக கூறப்படுகிறது. அப்போது, அவருடன் மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேருக்கும் இடைய
கைது


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை கொடுங்கையூரில் உள்ள கடும்பாடி அம்மன் கோவில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதில் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் நடனமாடியதாக கூறப்படுகிறது. அப்போது, அவருடன் மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேருக்கும் இடையே நடனம் ஆடுவது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்தவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் கார்த்திக்கை விடாமல் துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மாதவரம் பால் பண்ணை, மாத்தூர் காமராஜர் சாலையில் உள்ள பிரவீன் மஹால் அருகே கார்த்திக்கை சுற்றிவளைத்த அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் கை மற்றும் முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்திக்கை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற போலீசார் 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஆனந்தன் என்பது தெரியவந்தது.

3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் இளைஞரை துரத்திச் சென்று வெட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளதால், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P