Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் நகல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட உள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளின் நகலைப் பெற்று பார்க்கும் வசதி இன்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலை பெற்ற பிறகு, மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தை இரு நகல்கள் எடுத்து, பூர்த்தி செய்து ஆக.20, 21 ஆகிய நாள்களில் (காலை 9 முதல் மாலை 5 மணி) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டண தொகையை பணமாகச் செலுத்த வேண்டும்.
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை மேற்கண்ட இணையதள முகவரியில் 'பிரஸ் ரிலீஸ்' என்பதை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505, மறுகூட்டலுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் நேர்வுகளில், மொத்த மதிப்பெண்களில் ஏதேனும் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் அதுவே இறுதி மதிப்பெண்களாகும்.
எனவே தேர்வர்கள் தங்களது விடைத்தாளினை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடம் வழங்கி அதனை ஒப்பிட்ட பின்னர், மறுமதிப்பீட்டுக்கு விண்ணகுமாறு அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b