Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக தென்னை மரங்கள் கருகி வருகின்றன. தொடர் வெயில் மற்றும் போதிய மழையின்மை காரணமாக தேங்காய்களின் மகசூல் கடுமையாக குறைந்துள்ளது.
இதனால் சந்தைக்கு தேங்காய் வரத்து வெகுவாக குறைந்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள சில்லறை கடைகள் மற்றும் காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தேங்காய் 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது இரட்டிப்பு விலைக்கு விற்பனையாவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக தேங்காயை அதிகம் பயன்படுத்தும் உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் இனிப்பு தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தென்னை மரங்களில் பூக்கள் கருகி உதிர்வதால் காய்ப்பு திறன் குறைந்துவிட்டதாகவும், இருக்கின்ற தேங்காய்களும் சிறுத்து போய் பருப்பு இல்லாமல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்தும் தேங்காய் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்வு தொடரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீடுகளில் தேங்காய் பயன்பாட்டை குறைத்து வருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b