கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு – குஜிலியம்பாறை வட்டாட்சியர் பணியிட மாற்றம்
திண்டுக்கல், 19 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிட மா
வட்டாட்சியர்


திண்டுக்கல், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு நிர்வாக அதிகாரி ஒருவர், எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களை கட்சி அடிப்படையில் சேகரிக்க உத்தரவிட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. இந்த உத்தரவு குறித்து தகவல் வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சிபிஎம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சியின் உறுப்பினர் என்பதன் அடிப்படையில் பொதுமக்களின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை சேகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கல் தொகுதி எம்.பி. ஆர். சச்சிதானந்தம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கட்சி உறுப்பினர்களின் விவரங்களை அதிகாரிகள் மூலம் சேகரிப்பதன் நோக்கம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியதுடன், வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அய்யாசாமியை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தன்னிச்சையாக அரசியல் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை எந்த நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது, அதன் பின்னணி என்ன, யாருடைய அறிவுறுத்தலின் அடிப்படையில் உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam