Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாட்டில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே, அமைச்சர் பொறுப்புகளை ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாற்றி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு முன்மொழிவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சட்டப்பிரிவின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் டா. கியூபட்சன் அனுப்பியுள்ள இந்த முன்மொழிவில், அமைச்சர் பொறுப்புகளை சுழற்சி முறையில் வழங்குவதன் மூலம் கட்சியின் வளர்ச்சி, வாக்கு வங்கி விரிவாக்கம், தொண்டர்களின் உற்சாகம் மற்றும் தொகுதி வளர்ச்சியை வலுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான விஸ்வநாதன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும், ராஜேஷ் குமார் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் ஆண்டான ஏப்ரல் 2027 முதல் மார்ச் 2028 வரையிலான காலகட்டத்தில் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கத்பட் தாரகை மற்றும் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.டி. பிரவீன் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பொறுப்புகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
மூன்றாம் ஆண்டான ஏப்ரல் 2028 முதல் மார்ச் 2029 வரையிலான காலகட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ் மற்றும் 5 சட்டமன்ற உறுப்பினர்களில் செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்புகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுழற்சி முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் குறைந்தபட்சம் ஒரு முழு ஆண்டாவது அமைச்சர் பொறுப்பில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதுடன், கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தவும், கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என முன்மொழிவு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவை பரிசீலித்து, அமைச்சர் பொறுப்புகளை ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாற்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ